மீன்சுருட்டி பகுதியில் தேங்கிய மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றம்


மீன்சுருட்டி பகுதியில் தேங்கிய மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றம்
x

மீன்சுருட்டி பகுதியில் தேங்கிய மழைநீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டது.

அரியலூர்

மீன்சுருட்டி:

நான்கு வழிச்சாலை

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் இருபுறமும் 100 அடி மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் மீன்சுருட்டி கடைவீதிகளில் சாலை ஓரத்தில் இருபுறமும் 75 அடி இடம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டது. இதனால் இந்த சாலையில் மழைநீர் வடிகால் அமைக்காமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீன்சுருட்டி பகுதியில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழைநீர் செல்ல வழியின்றி கடைவீதியில் பஸ் நிறுத்தம் அருகே குளம்போல் தேங்கி நின்றது. மேலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கி நின்றதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருந்தது.

வடிகால் அமைக்க கோரிக்கை

மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கும் நிலை இருந்தது. பஸ் நிறுத்தத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தரைக்கடை இருக்கும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

எனவே சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகாலை உடனடியாக அமைக்க வேண்டும். நெல்லித்தோப்பு கிராமத்தில் புதிய மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக மோட்டார் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து நேற்று முன்தினம் 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

மழைநீர் வெளியேற்றப்பட்டது

இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து மீன்சுருட்டி கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே தற்காலிகமாக பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால் அமைத்து, அந்த வழியாக தேங்கி கிடந்த மழைநீரை வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story