விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில்  வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:45 PM GMT)

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு் செய்தாா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. விழுப்புரம் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலைய பின்புற பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் இருந்து மருதூர் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் திருச்சி நெடுஞ்சாலை, புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்ட வாய்க்கால் பணியை நேற்று மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மீன் மார்க்கெட்டில் இருந்து வரும் வாய்க்காலுக்காக திருச்சி நெடுஞ்சாலையில் வாய்க்கால் கட்டியுள்ளீர்கள். அந்த வாய்க்காலின் கிழக்கு பகுதியில் ஏற்கனவே வாய்க்கால் இருந்த பகுதி முழுவதும் ஆக்கிரமித்து மூடிக்கிடக்கிறது. அவ்வாறு மூடிக்கிடக்கும் வாய்க்காலை எப்போது கண்டுபிடித்து தூர்வாருவீர்கள், அங்கு தூர்வாரவில்லை என்றால், நெடுஞ்சாலையில் கட்டிய வாய்க்கால் வீண் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடுமையாக எச்சரிக்கை செய்தார். மேலும் வாய்க்காலில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Next Story