வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கழிவறை கட்டும் பணியை பார்வையிட்ட அவர், கழிவறை கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப்பொருட்களான செங்கல் தரமாக இல்லாததை கண்டறிந்து தரமாக உள்ள கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தி கழிவறையை கட்டுமாறு நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் 2 பாலங்கள், மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு கட்டுமானப்பணியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே விரைந்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
அதனை தொடர்ந்து ரங்கநாதன் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டதோடு, பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதை கண்டறிந்து மழைக்காலத்திற்கு முன்பாக சீரமைக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் மகாராஜபுரத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மின் மயானத்தை பார்வையிட்டதோடு, விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
பேட்டி
அதன் பிறகு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் ஆகியவற்றில் மண், குப்பை போன்றவற்றை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.