வாய்க்கால்களை தூர்வார வேண்டும்


வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 11 May 2023 6:45 PM GMT (Updated: 11 May 2023 6:45 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வாரப்படாத வாய்க்கால்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் தமிழன் கேணி குளம், அய்யாக்கேணி குளம், வெட்டுக்கேணி குளம், ராமன் கேணி உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று நிரப்புவதற்காக அப்பகுதியில் வாய்க்கால்கள் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் காலம் காலமாக குளங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது.

இதன் மூலம் அந்த குளங்களை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால், வாய்க்கால்களில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டது.

சுகாதார சீர்கேடு

நாளடைவில் வாய்க்கால்கள் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கலந்து மேடான பகுதியாக மாறியது. இதனால், குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு ஆற்று தண்ணீர் செல்லும் இந்த வாய்க்கால்களில், குப்பைகள் சூழ்ந்து, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, கழிவு நீர் மற்றும் குப்பைகள் சூழ்ந்து காணப்படும் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story