வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சி
62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.
62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்.
வீர மங்கை
வீரமங்கை வேலுநாச்சியார் மருதுசகோதரர்கள் ஆதரவுடன், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஒரு படையை உருவாக்கினார். அவரது தலைமையில் இந்த படை 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டது.
இறுதியாக வேலு நாச்சியார் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். அதன்பின் வேலுநாச்சியார் 1789-ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். வடஇந்தியாவை சேர்ந்த ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப்பெண்மணி வேலுநாச்சியார் ஆவார்.
நாடக நிகழ்ச்சி
இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை. சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் கடந்த 1976-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி இயற்கை எய்தினார்.
வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத்துறை மூலமாக மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நாடகத்தைதொடங்கி வைத்தனர்.
சிவகங்கை
அதில் கலெக்டர் அனிஷ்சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நாடக நிகழ்ச்சியில் 62 கலைஞர்கள் தோன்ற 18-ம் நூற்றாண்டை கண்முன்னே கொண்டு வரும் காவிய கதைகள் குறித்தும், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பொற்காலத் தோற்றம் குறித்தும், தமிழ் மண்ணின் வீர சரித்திரம் குறித்தும், அன்னியர்களால் மறைக்கப்பட்டு பல்லாண்டு கால உழைப்பின் பயனாக மீண்டெழுந்திருக்கும் தாய்த் தமிழ் மண்ணின் வெற்றிச் சரித்திரம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சியில் வருகிற 27-ந் தேதியும், கோவையில் 28-ந் தேதியும், சிவகங்கையில் 30-ந் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.