மேச்சேரி அருகே பரபரப்பு: தொழிலாளியை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது-கள்ளக்காதலனும், தோழியும் சிக்கினர்
மேச்சேரி அருகே தொழிலாளியை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். அவருடைய கள்ளக்காதலனும், தோழியும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேச்சேரி:
தொழிலாளி சாவு
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மலையாம்பாளையத்தை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் மகன் சுந்தரராஜ் (வயது 32). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி நிவேதா (27). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 17-ந் தேதி கோவிந்தராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பாக சுந்தரராஜ் தந்தை ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மனைவி கைது
இதற்கிடையே சுந்தரராஜ் கழுத்தில் காயம் இருந்தது. அப்போது அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறையில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சுந்தரராஜை கொலை செய்து விட்டு நாடகமாடியது அம்பலமானது. உடனே போலீசார் நிவேதாவை கைது செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தோழி வித்யா (27), கள்ளக்காதலன் தினேஷ் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தலையணையால் அமுக்கி கொலை
3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, சுந்தரராஜ் தூங்கும் போது தினேஷ், நிவேதா, வித்யா ஆகிய 3 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போன்று அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டனர். உறவினர்களுக்கு நிவேதா, தன்னுடைய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு மர்ம முடிச்சுகள்
இந்த கொலை தொடர்பாக கைதான 3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர். நிவேதாவுக்கும், தினேசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது எப்படி? எவ்வளவு நாட்களாக இவர்களது ரகசிய உறவு உள்ளது. எங்கு எங்கு சந்தித்துக் கொண்டார்கள்.
தினேஷ், நிவேதா இருவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படும் நிலையில் வித்யாவுக்கும், இவர்களுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது. சுந்தரராஜை கொலை செய்ய 3 பேரும் திட்டமிட காரணம் என்ன? இவர்கள் 3 பேருக்கும் அந்தரங்க உறவு எதுவும் இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு மர்ம முடிச்சுகள் இந்த சுந்தரராஜ் கொலையில் உள்ளன.அதற்கு எல்லாம் விடை காண போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே சுந்தரராஜ் கொலையில் இன்னும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.