திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஆத்தூரில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் கடை வீதியில் வசிஷ்ட நதியின் தென்பகுதியில் தர்மராஜர், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தர்ம சித்தி செல்வ விநாயகர் சன்னதி மற்றும் ராஜகோபுரம், கொடிமரம், மூலஸ்தானம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. ேமலும் கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் சிம்மங்கள், கோவிலின் மதில் சுவரில் அலங்கார தெய்வ சிற்பங்கள் புனரமைக்கப்பட்டன. இந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து நேற்று திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, ஆத்தூரில் முக்கிய பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டது.

அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். காலை 5 மணிக்கு கும்பாபிஷேகத்தையொட்டி, 4-வது கால யாக பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு ேஹாமங்கள், தீபாராதனை நடந்தது. யாத்ரா தானத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக புனிதநீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீதும், கோபுரங்கள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி கோஷம் முழங்கியபடி சாமியை வழிபட்டனர். பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை துளுவ வேளாளர் மகாஜன மன்ற தலைவரும், விஜயராம் நிதிநிறுவனங்களின் நிர்வாக இயக்குனருமான ஏ.கண்ணன், துளுவ வேளாளர் மகாஜன மன்ற செயலாளர் வக்கீல் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story