திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குறிச்சிக்குளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அரியலூர் மாவட்டத்திலேயே முதல் திருவிழாவாக தொடங்கும் இந்த கோவிலின் திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 7 கிராம மக்கள் இணைந்து நடத்தும் இந்த திருவிழாவில் தினமும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மன் தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து, தேரோடும் வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை தரிசனம் செய்தனர்.