திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
6 வது முறையாக சிறப்பான ஆட்சியை வழங்குகிறது திராவிட அரசு என திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திராவிடம் யாரையும் பிரிக்காது, தாழ்த்தாது அனைவரையும் சமமாக நடத்தும், கூட்டங்கள் எத்தனை நடத்தினாலும் திமுகவின் சாதனைகளை சொல்லி முடிக்க முடியாது.
மாண்புமிகு கவர்னருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியது தான் திராவிடம்.
அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அதனை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம். அதனால்தான் அதை பார்த்து கவர்னர் பயப்படுகிறார். தமிழ்நாட்டில் நிலவும் அமைதியை குலைக்க கவர்னர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கவர்னருடனான தனிப்பட்ட நட்பு வேறு; கொள்கை வேறு. தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டு தர மாட்டேன். இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி காட்டுவோம் என்றார்.