"திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது" - அமைச்சர் கீதாஜீவன்


திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது - அமைச்சர் கீதாஜீவன்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 6:45 PM GMT)

“திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது” என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவத்துறைக்கு கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்ததை போன்று முதல்-அமைச்சரும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். எல்லா இடங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,008 இடங்களில் நகர்நல மையங்களை கடந்த வாரம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அவர் மருத்துவ சேவைகள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் விபத்துகளில் சிக்குபவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம், முதலுதவி சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் அட்டை வைத்திருந்தால் அவசர சிகிச்சைகளுக்கு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். கருணாநிதி அமைத்த அடித்தளம் மூலம் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது. முகாமில் உள்ள அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.


Next Story