வரையாடுகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வரையாடுகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் வரையாடுகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வரையாடுகள்
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய், அரிய சிங்கவால் குரங்கு, அழிந்து வரக்கூடிய வனவிலங்குகளின் பட்டியலில் உள்ள வரையாடு போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இதில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் அட்டகட்டிக்கு கீழ் பகுதியில் உள்ள பாறைகள், மலைகளில் சிறு செடிகள், புற்கள் ஆகியவற்றை தின்று வாழ்ந்து வரும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள வரையாடுகள் பல சமயத்தில் மலைமுகடுகளில் இருந்து கீழே இறங்கி வந்து சாலையோரத்தில் உள்ள புற்களை சாப்பிட்டுவிட்டு தடுப்புசுவர்களில் படுத்து ஓய்வெடுத்து வருகிறது.
தொந்தரவு
இதுபோன்று மலைப்பாதை சாலையில் நடமாடி சுற்றித்திரியும் வரையாடுகளை பாதுகாக்க வனத்துறையினர் அதிக கவனம் செலுத்தி, அதற்காக வேட்டை தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தி கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வரையாடுகளை பார்த்தால் அவற்றின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது, அவைகளை தொட்டு பார்ப்பது, துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவைகள் அங்குமிங்கும் மிரண்டு ஓடுகின்றன. இதனால் அவைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் சுற்றித்திரியும் வரையாடுகளுக்கு அருகில் சென்று தொந்தரவு செய்ய வேண்டாம், தூரத்தில் இருந்தே புகைப்படம் எடுத்து பார்த்து மகிழ்ந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஒத்துழைக்க வேண்டும்
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் வரையாடுகளை பாதுகாப்பதற்கு வனத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவைகளுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு நாளும் தனியாக வேட்டை தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தி பல்வேறு சிரமங்கள் மத்தியில் வரையாடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். எனவே சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது தவிர சாலையில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு தின்பண்டங்களை போடவேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






