வடிகால் வாய்க்கால்களை ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணி


வடிகால் வாய்க்கால்களை ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணி
x

பட்டுக்கோட்டை அருகே வடிகால் வாய்க்கால்களை ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணியை அண்ணாதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே வடிகால் வாய்க்கால்களை ரூ.15 லட்சத்தில் தூர்வாரும் பணியை அண்ணாதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தூர்ந்துபோன வாய்க்கால்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பால முத்தி, ஏனாதி, வீரக்குறிச்சி, நம்பிவயல், அனைக்காடு மற்றும் பழஞ்சூர் கிராமங்களில் உள்ள முதலிகுளம் வடிகால் வாய்க்கால்கள் மிகவும் தூர்ந்து போய் இருந்தன.

இந்த வடிகால் வாய்க்கால்களின் இருபுறங்களிலும் மணல்மேடுகளும், முட்புதர்களும், செடி கொடிகளும் மண்டி கிடந்தன. இதுகுறித்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து நீர்வளத் துறையின் சார்பில் மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

ஆழப்படுத்த நடவடிக்கை

இதில் பட்டுக்கோட்டை நீர்வளத் துறையின் நிர்வாக பராமரிப்பில் உள்ள சுக்கிரன்பட்டி வடிகால் வாய்க்கால், சித்தேரி வடிகால் வாய்க்கால், நரசிங்கபுரம் பிரதான வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் 2 புறமும் மேடாக உள்ள பகுதிகளை அகற்றவும், நாணல் செடி, கொடிகளை அகற்றி அகலப்படுத்தி ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணியினை அண்ணாதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.15 லட்சம் செலவில்...

வருகிற ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் பட்டுக்கோட்டை கடைமடை பகுதி வரை முழுவதுமாக செல்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும் என்ற கவனத்தில் நீர்வளத்துறையின் சார்பில் இந்த தூர்வாரும் பணியானது ரூ.15 லட்சம் செலவில் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணியின் முதல் பகுதியாக வீரக்குறிச்சி பகுதியில் இருந்து தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவழக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், உதவி பொறியாளர் சுரேந்திர மோகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம், தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story