கோவில் திருவிழாக்களில் பக்தர் போல் வேடமிட்டு நகைப்பறிப்பு-சொகுசு பங்களா கட்டி ஆடம்பர வாழ்க்கை


கோவில் திருவிழாக்களில் பக்தர் போல் வேடமிட்டு நகைப்பறிப்பு-சொகுசு பங்களா கட்டி ஆடம்பர வாழ்க்கை
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நகைப்பறிப்பில் கைதான பெண், கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் போல்வேடமிட்டு கைவரிசை காட்டியதும், சொகுசு பங்களா கட்டி ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் அம்பலமாகி உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நகைப்பறிப்பில் கைதான பெண், கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் போல்வேடமிட்டு கைவரிசை காட்டியதும், சொகுசு பங்களா கட்டி ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் அம்பலமாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகை பறிப்பு

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பெருமாள் பிரபு. இவருடைய மனைவி சந்திர பிரபா (வயது 35). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியுடன் பஸ்சில் பூமார்க்கெட் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகளவு இருந்ததாக தெரிகிறது. பூ மார்க்கெட் பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் சந்திரபிரபா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து தப்பியோடிய அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பெண் கைது

விசாரணையில் சந்திரபிரபாவிடம் நகையை பறித்தது திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி சத்யா (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடா்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதன் விவரம் குறித்து போலீசார் கூறியதாவது:-

சொகுசு வாழ்க்கை

சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள கோவில்களில் எந்ெதந்த தேதியில் திருவிழா நடக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்வார்கள். பின்னர் திருவிழாக்கள் நடைபெறும் நேரத்தில் அங்கு சென்று கூட்டத்தை பயன்படுத்தி, எவ்வாறு நகை பறிப்பில் ஈடுபடலாம் என முன் கூட்டியே திட்டம் வகுப்பார்கள்.

அதன்படி சத்யா திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் கோவில்களில் நடந்த திருவிழாக்களில் கைவரிசை காட்டியுள்ளார். இவர் திருவிழா நடைபெறும் ஊருக்கு சென்று அங்கு, நெற்றி மற்றும் கண்ணங்களில் சந்தனம், குங்குமமிட்டு பெண் பக்தரை போல வேடமிட்டு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்களது சொந்த ஊரில் சொகுசு பங்களா கட்டி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா

மேலும் கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அப்போது பக்தர்களின் கூட்டம் அதிகளவு இருக்கும். அந்த கூட்டத்தை பயன்படுத்தி நகை மற்றும் பொருட்களை திருடி செல்ல சத்யா முன்கூட்டியே திட்டமிட்டு கோவை வந்துள்ளார். அப்போது தான் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட முயன்றார். இதில் அவர் கையும், களவுமாக சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

நகை பறிப்பில் ஈடுபட்ட சத்யாவுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story