தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும்


தூர்வாரும் பணியை உடனே தொடங்க வேண்டும்
x

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-

அம்மையகரம் ரவிச்சந்தர்:- டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி, ஆற்றில் தண்ணீர் திறக்கும்போது அவசர அவசரமாக நடைபெறுவதால் பணிகளில் தரம் இல்லாமல் போகிறது. எனவே தூர்வாரும் பணியினை மார்ச் மாதத்திலேயே தொடங்க வேண்டும். விவசாயிகளிடம் தூர்வாரும் பணிகள் தொடர்பாக தற்போதே கருத்துகளை கேட்டு, முன்னுரிமை அடிப்படையில் பணிகள் தொடங்க வேண்டும். தூர்வாரும் பணிகள் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் கருத்துகளை அமைச்சரும், உயர் அதிகாரிகளும் பெற வேண்டும்.

மும்முனை மின்சாரம்

சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்:- கோடைசாகுபடிக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பகலில் கூடுதல்நேரம் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் மானாவாரிப் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. எனவே நிலக்கடலையை விவசாயிகள் எளிதாக விற்பனை செய்ய ஏதுவாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக ஏலத்துக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அதே போல் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு பெற்றுத் தர வேண்டும். கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை காலத்தோடு வழங்க வேண்டும்.

தேவையான உரம்

ராயமுண்டான்பட்டி கண்ணன்:- திருமண்டங்குடி சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு தற்போதும், வங்கியிலிருந்து வரும் நோட்டீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டும். கோடை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

திருப்பூந்துருத்தி சுகுமார்:- திருவையாறு புறவழிச்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலம் அனைத்தும் நிலம் எடுப்பு சட்டத்திற்கு புறம்பாக எடுக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆம்பலாப்பட்டு தங்கவேல்:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு மூட்டைக்கு ரூ.35 பிடித்தம் செய்யப்படுகிறது. இவற்றை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எதற்காக ரூ.35 பிடித்தம் செய்யப்படுகிறது என ரசீது கொடுத்தால் நன்றாக இருக்கும்.

கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story