கோவிலுக்கு செல்லும் வழியில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்


கோவிலுக்கு செல்லும் வழியில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்
x

குமரலிங்கம் பகுதியில் பழமையான கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

குமரலிங்கம் பகுதியில் பழமையான கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பழமையான கோவில்

மது அருந்துவது என்பது கேவலமான செயலாக பார்க்கப்பட்ட காலம் மாறி விட்டது. அலுப்புக்கு மருந்தாக, அலப்பறைக்கு துணையாக, தோல்விக்கு ஆறுதலாக, வெற்றிக் கொண்டாட்டமாக, கவுரவ அடையாளமாக என மதுவை அருந்துபவர்கள் பலவிதங்களில் அடையாளப்படுத்துகின்றனர். காரணங்கள் வேறு வேறானாலும் போதையும் அது அழைத்துச்செல்லும் தவறான பாதையும், அதனால் வரும் தீமையும் மாறுவதில்லை என்பதை பலரும் உணர்வதில்லை. அதுமட்டுமல்லாமல் வெட்கப்பட்டு, அச்சப்பட்டு, ஒளிந்து மறைந்து மது அருந்திய காலம் போய் பட்டப்பகலில் சாலை ஓரங்களில் அமர்ந்து மது அருந்தும் அளவுக்கு சமூக சீர்கேடு உருவாகியுள்ளது.

அந்தவகையில் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரத்தடி, குளத்தங்கரை, வயல்வெளி, வாய்க்கால் மேடு, பள்ளிக்கூடம், பஸ் நிறுத்தம் என எந்த பகுதியையும் விட்டு வைக்காமல் குடிமகன்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பது தொடர்கதையாக உள்ளது.அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் குமரலிங்கம் பகுதியில் பழமையான கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்களால் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

பக்தர்கள் அச்சம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

அமராவதி ஆற்றங்கரையில் 1000 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் சிலர் அமர்ந்து மது அருந்துகின்றனர்.அதுமட்டுமல்லாமல் போதை தலைக்கேறி ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதும், ஆபாச வார்த்தைகள் பேசுவதும், அலங்கோலமாக விழுந்து கிடப்பதும் இந்த பகுதியில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது.அத்துடன் அமராவதி ஆற்றுக்கு குளிக்க, துணி துவைக்க செல்லும் பொதுமக்களும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனர்.அவர்கள் குடிமகன்களின் அட்டகாசத்தால் அச்சத்துடனும் அருவெறுப்புடனும் முகம் சுளித்து கடந்து செல்லும் நிலை உள்ளது.இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளது.

போலீஸ் ரோந்து அவசியம்

மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை ரோட்டிலும், விளைநிலங்களில் உடைத்து வீசுகின்றனர்.இதனால் பலரும் காயமடையும் நிலை ஏற்படுகிறது.பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவற்றை பயன்படுத்தி விட்டு மழைநீர் வடிகால்களில் வீசுகின்றனர்.அவை மழைக்காலங்களில் அடைப்பை ஏற்படுத்துவதுடன், கொசு உற்பத்திக்கும் காரணமாகிறது.மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் கலந்து ஆற்று நீரை மாசுபடுத்துகிறது.எனவே குடிமகன்களின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீசார் இந்த பகுதியில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் ரோந்து சென்று பொதுவெளிகளில் மது அருந்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.



Next Story