'லிப்ட்' கேட்டு குடிமகன்கள் தொல்லை


லிப்ட் கேட்டு குடிமகன்கள் தொல்லை
x
திருப்பூர்


சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி 'லிப்ட்' கேட்டு தொல்லை தரும் குடிமகன்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

குடிமகன்கள் அட்டகாசம்

மாவட்டம் முழுவதும் பெரும்பாலான மதுக்கடைகள் ஊரை விட்டு சற்று தள்ளியே அமைக்கப்பட்டுள்ளன. அதில் பல இடங்களில் விவசாய நிலங்களுக்கு அருகிலும், நீர் நிலைகளுக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாட்டில்களை உடைத்து வீசியும், பாலித்தீன் கவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தியும் குடிமகன்கள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குளங்கள், ஓடைகள், மறைவான புதர்கள், சாலையோர மரத்தடிகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல இடங்களை குடிமகன்கள் பாராக மாற்றி பாழாக்கி வருகின்றனர். இந்தநிலையில் ஊருக்கு தொலைவில் இருக்கும் மதுக்கடைகளுக்கு செல்வதற்கு 'லிப்ட்' கேட்டு தொல்லை தருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:-

'ஊருக்கு சற்று தொலைவில் இருக்கும் மதுக்கடைகளுக்கு செல்வதற்கு குடிமகன்கள் ஒருவருக்கு ஒருவர் 'லிப்ட்' கொடுத்து உதவி செய்து வந்தனர். இந்தநிலையில் தற்போது ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத் தொகை பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஜெயில் தண்டனையும் வழங்க விதிகளில் இடம் உள்ளது. இதனால் அச்சம் அடைந்துள்ள குடிமகன்கள் பலரும் தற்போது நீண்ட தொலைவிலுள்ள மதுக்கடைகளுக்கு நடந்து செல்கின்றனர்.

மன உளைச்சல்

மதுக்கடைகளை நோக்கி போகும்போது உடலில் தெம்பும், மது அருந்த வேண்டும் என்ற வெறியும் இருப்பதால் பெரும்பாலும் வேகமாக நடந்து சென்று விடுகின்றனர் (அதற்கும் 'லிப்ட்' கேட்பவர்கள் உண்டு. அது கொஞ்சம் டீசண்ட் ரகம்). ஆனால் மது அருந்தி விட்டு போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பும்போது தான் சிக்கல் ஆரம்பமாகிறது. எனவே சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து 'லிப்ட்' கேட்கின்றனர்.

அவ்வாறு 'லிப்ட்' கேட்கும்போது கிட்டத்தட்ட சாலையின் நடுவில் வந்து வாகனங்களின் குறுக்கே விழுவது போல நிற்பதால் தவிர்க்க முடியாத நிலையில் வாகனங்களை நிறுத்த வேண்டியதுள்ளது. இவ்வாறு போதையில் வண்டியில் ஏறும் நபர்கள் தள்ளாடியபடி அமர்ந்திருப்பதால் இருசக்கர வாகனங்களை சீராக இயக்க முடியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் குடலைப் புரட்ட வைக்கும் மது வாடையுடன் காதுக்கு அருகில் வந்து ஏதாவது தேவையற்ற விஷயங்கள் பேசி மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். இதில் ஒருசில குடிமகன்கள் தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விட்டு ' நான் அங்கே இறங்கணும்னு சொன்னேனே! இங்கே கொண்டு வந்து விட்டால் என்ன அர்த்தம்' என்று கெட்ட வார்த்தைகளில் திட்டி சண்டைக்கு வரும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

ரோந்துப்பணி

எல்லாவற்றுக்கும் மேலாக வழியில் போலீசாரிடம் சிக்கினால் குடிமகனுக்கும் சேர்த்து நாம் அபராதத் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் ஒருசில வேளைகளில் குடிமகன்கள் பெண்களின் வாகனங்களையும் நிறுத்துகின்றனர். அருகில் வந்ததும் 'ஸாரி மேடம். ஹெல்மெட் போட்டிருந்ததனாலே ஆம்பளைன்னு நினைச்சிட்டேன். நீங்க போங்க' என்று அசடு வழிய அனுப்பி வைக்கிறார்கள்.

சில நேரங்களில்'பொம்பளை 'லிப்ட்' குடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க. அண்ணன் தம்பினா கூட்டிட்டு போக மாட்டீங்களா' என்று பஞ்ச் டயலாக் பேசி பாடாய் படுத்துகிறார்கள். இதனால் பெண்கள் மிகவும் அச்சமடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் சில குடிமகன்கள் ஆடை கலைந்து அலங்கோலமான கோலத்தில் இருப்பதால் பெண்கள் கூனிக்குறுகும் நிலை ஏற்படுகிறது. எனவே 'லிப்ட்' கேட்டு தொல்லை தரும் குடிமகன்களிடமிருந்து தப்பிக்க பல கிலோமீட்டர்கள் சுற்றி வேறு பாதையில் செல்லும் பெண்களும் உள்ளனர். ரொம்ப அர்ஜென்ட் சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சார் என்று டிரிபிள்ஸ் ஏறிக்கொள்ளும் குடிமகன்கள் கூடுதல் தொல்லையாகும்.

எனவே இவ்வாறு தொல்லை செய்யும் குடிமகன்களை கட்டுப்படுத்த போலீசார் ரோந்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் 'லிப்ட்' கேட்டு சவாரி செய்யும் குடிமகன்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றினாலும் மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். ஆனால் அப்பாவி வாகன ஓட்டிகளுக்கு தண்டனை வழங்கக்கூடாது'.

இவ்வாறு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story