'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை சிதம்பரபுரத்தில் குடிநீர் வினியோகம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக செவ்வாய்க்கிழமை சிதம்பரபுரத்தில் குடிநீர் வினியோகம் நடந்தது.
உடன்குடி
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்ததன் பேரில் உடன்குடி அருகே சிதம்பரபுரத்தில் நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
உடன்குடி யூனியன் மாநாடு தண்டுபத்துகிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிதம்பரபுரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தில் தனியார் லாரிகள் மூலம் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் சிலர் சில கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று அருகிலுள்ள கிராமங்களில் தண்ணீர் சேகரித்து வந்து பயன்படுத்தி வந்தனர். இப்பிரச்சினை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பெண்கள் ஆர்ப்பாட்டம்
இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடி நிலவியதால் நேற்று முன்தினம் காலிகுடங்களை தெருவில் வைத்து பெண்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து நேற்று தினத்தந்தி நாளிதழில் மட்டும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார். அந்த கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டனர்.
தினத்தந்திக்கு நன்றி
இதை தொடர்ந்து நேற்று சிதம்பரபுரத்திற்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இப்பிரச்சினை குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்,