புதிய குடிநீர் திட்டத்தில் குளறுபடிகளால் வினியோகம் பாதிப்பு


புதிய குடிநீர் திட்டத்தில் குளறுபடிகளால் வினியோகம் பாதிப்பு
x

புதிய குடிநீர் திட்டத்தில் குளறுபடிகளால் வினியோகம் பாதிப்பு

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் திருமூர்த்தி புதிய கூட்டு குடிநீர்த் திட்டத்தில் நிலவும் குளறுபடிகளால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதாக உள்ளாட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குடிநீ்ர் திட்டம்

பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர் ஆகியவை உள்ளாட்சி நிர்வாகங்களில் பொறுப்பில் உள்ளது. ஆனால் குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் குடிநீர் வினியோகத்தை சீரமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக உள்ளாட்சித் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு திருமூர்த்தி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கை கொடுத்து வருகிறது.

இந்த திட்டத்தில் புதிய நீரேற்று நிலையங்கள், தரைமட்ட சேமிப்புத் தொட்டிகள் ஆகியவை அமைக்கப்பட்டு, புதிய குழாய்கள் பொருத்தப்பட்டு திருமூர்த்தி புதிய கூட்டு குடிநீர்த் திட்டம் சமீபத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.ஆனால் அந்தத் திட்டத்தில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு உள்ளிட்ட குளறுபடிகளால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுவதாக உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை

திருமூர்த்தி புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் அடிக்கடி வினியோகம் பாதிக்கப்படுகிறது.மின்தடை, குழாய் உடைப்பு என ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் அடிக்கடி குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எனவே புதிய திருமூர்த்தி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைந்து பொதுமக்களுக்கு தடையில்லாமல் சீராக குடிநீர் வினயோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள குடிநீரின் அளவை சரியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-----------------


Next Story