குழாயின் வால்வில் ஏற்பட்ட பழுதால் வீணாகும் குடிநீர்


குழாயின் வால்வில் ஏற்பட்ட பழுதால் வீணாகும் குடிநீர்
x

தவுட்டுப்பாளையம் அருகே குழாயின் வால்வில் ஏற்பட்ட பழுதால் குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

வீணாகும் குடிநீர்

கரூர் மாவட்டம், புகழூர், வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வட்ட கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அதிலிருந்து குடிநீர் தொட்டிக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. பின்னர் அங்கிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இப்பகுதி மக்கள் இந்த தண்ணீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் மற்றும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தவுட்டுப்பாளையம் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் வால்வு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வால்வு பழுதடைந்து தற்போது அந்த வால்வு வழியாக ஏராளமான குடிநீர் வெளியேறி நீரோடை போல் செல்கிறது.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் புகழூர் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களும் தங்களின் அன்றாட தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த வால்வு பழுதடைந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதிகளுக்கு ஓடிசென்று தேங்கி நிற்கிறது. இதனால் குளம்போல் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் வால்வில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்றனர்.


Next Story