குடிநீரை தேடி அலையும் கிராம மக்கள்


குடிநீரை தேடி அலையும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 16 Oct 2022 6:45 PM GMT (Updated: 16 Oct 2022 6:47 PM GMT)

சிங்கம்புணரி அருகே குடிநீருக்காக கிராம மக்கள் தள்ளுவண்டியுடன் அலையும் நிலை உள்ளது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே குடிநீருக்காக கிராம மக்கள் தள்ளுவண்டியுடன் அலையும் நிலை உள்ளது.

குழாய் உடைந்தது

சிங்கம்புணரி அருகே சியாமுத்துபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் வசதிக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொட்டி உடைந்து பழுதானதையடுத்து புதிய தொட்டி அதன் அருகிலேயே கட்டப்பட்டது.

30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு மோட்டார் மூலம் குடிநீர் நிரப்புவதற்காக குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டது. இதற்கிடையே பழைய தொட்டியை உடைக்கும்போது அருகில் இருந்த குடிநீர் குழாய்கள் உடைந்தது.

தள்ளுவண்டியில்...

இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தள்ளுவண்டியிலும், மோட்டார்சைக்கிளும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடங்களில் தண்ணீரை எடுத்து வருகின்றனர். இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றும் போது குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் புதிய தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக எங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. நாங்கள் ஒரு மாத காலமாக குடிநீருக்காக தினந்தோறும் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீரை தலையில் சுமந்தும், தள்ளுவண்டியில் வைத்தும் எடுத்து வருகிறோம். நாங்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு உடைந்த குழாய்களை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


Next Story