குடிநீர், சாலை வசதி செய்து தர வேண்டும்-கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


குடிநீர், சாலை வசதி செய்து தர வேண்டும்-கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x

குடிநீர், சாலை வசதி செய்து தர வேண்டும் என்று தச்சநல்லூர் மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மண்டல தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் லெனின் முன்னிலை வகித்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சந்திரசேகர், கந்தன், சங்கர்குமார், கீதா, முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். தெரு விளக்கு பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். உடையார்பட்டி சுடுகாட்டில் பழுதடைந்த கூரையை சீரமைத்து தர வேண்டும். நெல்லை டவுன் பாரதியார் உயர்நிலைப்பள்ளியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர வேண்டும். அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஊருடையான்குடியிருப்பு சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.

கூட்டத்தில் பொறியாளர்கள் சிவசுப்பிரமணியன், ஜெயகணபதி, ரமேஷ், சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story