மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு


மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு
x

மடத்துக்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதிகாரிகள் அலட்சியம்

குடிநீர் வினியோகம், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியமான பணிகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகங்களிடம் உள்ளது.

ஆனால் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுவதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட துங்காவி, காரத்தொழுவு, மெட்ராத்தி ஊராட்சிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதிகளுக்கு திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திருமூர்த்தி புதிய கூட்டு குடிநீர்த் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய திட்டத்தில் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் பழைய குடிநீர்த்திட்டத்தில் வினியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.

மின்தடை

இந்தநிலையில் உடையார்பாளையம் நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து இந்த 3 ஊராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகிப்பதற்கான மோட்டார்களை இயக்குவதற்கு தேவையான மின் வினியோகம் அடிக்கடி தடைப்பட்டு வருகிறது.

மின்தடை குறித்து முறையான தகவல்களை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் பொதுமக்களின் மிக முக்கிய தேவையான குடிநீர் வினியோகத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் மின் பாதை பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த பகுதிக்கான மின் வினியோகம் சீராக கிடைக்கும் வகையில் கூடுதல் மின் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதி

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக துங்காவி, காரத்தொழுவு, மெட்ராத்தி ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்படும் சிக்கலால் பொதுமக்களிடம் தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக உள்ளாட்சி நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோடை காலங்களில் திருமூர்த்தி அணையில் நீர் இருப்பு குறையும்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக இருக்கும்.ஆனால் நீர் இருப்பு போதுமான அளவில் உள்ள நிலையிலும் மின்தடை மற்றும் குழாய் உடைப்பால் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-------------------------


Next Story