பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்


பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி கூறினார்.

ஆய்வு கூட்டம்

குமரி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலாசாமி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விசாயிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் பழுதுகள் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம், ஸ்வச் பாரத் மிஷன் 2.0 திட்டம், அம்ரூத் 2.0 திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இல்லம் தேடி கல்வி

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு நிலுவையிலுள்ள பட்டா தீர்வு காண்பது குறித்தும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித்திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம் குறித்தும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களான நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம், ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தடையின்றி குடிநீர்

குறிப்பாக, தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளை தூர்வாரிட நீர்வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பழுதடைந்துள்ள சாலை பகுதிகளை கண்டறிந்து அவற்றினை விரைந்து சரிசெய்திட வேண்டும். குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கான முன்னெடுப்பு பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைநிலமெடுப்பு) ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story