ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

அதில், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் விளைநிலம், ஏரி, குளம், நீர்நிலை, நீர் வழிப்பாதை ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப அபகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

தனியார் பள்ளிகள்

நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க தலைவர் முத்துமணி தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் இடம் அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான நிதி இதுவரை பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. நெல்லை மாவட்டத்தில் 118 நர்சரி பள்ளிகள், 20 மெட்ரிக் பள்ளிகளில் இந்த திட்டத்தின் கீழ் 3,500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு இந்த தொகையை உடனடியாக பள்ளிக்கூடங்களுக்கு வழங்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் அன்வர் ஷா, மானூர் தெற்கு பட்டி கிளை பொறுப்பாளர்கள் அப்துல் ரகுமான், ராஜா முகமது உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், 'மானூர் தாலுகா தெற்குபட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி 8 மாதங்கள் ஆகியும், இன்னும் குடிநீர் வினியோகம் செய்யாமல் பழைய நிலையிலேயே தெரு நல்லியில் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். எனவே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறிஉள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் பகுதி தலைவர் முகமது யூசுப் சுல்தான் தலைமையில் கொடுத்த மனுவில், 'மேலப்பாளையம் கரீம் நகரில் கடந்த 14-ந் தேதி மேலப்பாளையம் கிணற்றில் அப்சர் என்ற சிறுவன் மூழ்கி உயிரிழந்தான். அவனது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறிஇருந்தனர்.

மேலும் இந்தகூட்டத்தில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அம்பையை சேர்ந்த குமார் மகன் தினேஷ் (17) நீரில் மூழ்கி இறந்ததற்காக ரூ.1 லட்சம் காசோலை குடும்பத்துக்கு கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார். பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்த சத்தியபாமாவின் கணவர் தினேஷ்குமார் என்பவர் தண்ணீரில் மூழ்கி இறந்ததற்காக குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் காசோலையை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி உதவி கலெக்டர் குமாரதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிகண்ணு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story