குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்


குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
x

கோடை வெயிலால் ஆற்றுப்படுகைகள் வறண்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

கோடை வெயிலால் ஆற்றுப்படுகைகள் வறண்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

குடிநீர் வினியோகம்

அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்தபகுதி மக்களுக்கு வைகை அணை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரைக் கொண்டு நகராட்சி நிர்வாகம் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். தற்போது நகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தாமிரபரணியில் இருந்து தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும் வைகை அணையில் இருந்து 30 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கப்பெற்றது. இதனை கொண்டு நகராட்சி நிர்வாகம் வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

சிக்கனம்

கடந்த 2 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் ஆற்றுப்படுகைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகு அளவில் குறைந்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 14 கிணறுகளில் பம்பிங் செய்யப்பட்டு குடிநீரைப்பெற்று வந்த நிலையில் தற்போது 7 கிணற்றில் இருந்தே குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அருப்புக்கோட்டை நகருக்கு வரும் குடிநீரின் அளவு 2 பக்கமும் பாதி அளவில் குறைந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவைக்கு மட்டும் குடிநீரை பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை பயன்படுத்தி துணி துவைத்தல், வீடு சுத்தம் செய்தல் போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story