குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி செய்து தர வேண்டும்


குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி செய்து தர வேண்டும்
x

குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி செய்து தர வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சை அருகே குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி வேண்டி பொதுமக்கள், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்படி தஞ்சை அருகே உள்ள மேலவெளிஊராட்சி மேட்டுதெரு பின்புறம் உள்ள பொதுமக்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநகர் மற்றும் விஜயநகர் விரிவாக்கம் மற்றும் ஆத்மநேசர் நகரில் சுமார் 120 குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, சாலை, தெரு விளக்கு, போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதற்காக பலமுறை கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வணே்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பணி தர மறுப்பு

தஞ்சையை அடுத்த கரந்தையை சேர்ந்த சத்துணவு சமையலர் புவனேஸ்வரி, கலெக்டர்தீபக்ஜேக்கப்பிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 1996-ம் ஆண்டு திருவையாறு ஒன்றியத்தில் சத்துணவு சமையலராக பணியில் சேர்ந்தேன். எனது கணவர் இறந்து விட்டார்.. எனது மகள் தஞ்சையில் படிப்பதால் நான் தஞ்சைக்கு வேலையை மாற்றி தருமாறு கேட்டு எனக்கு பணி மாற்றி கொடுக்கப்பட்டது. அதன்படி 5 மாதங்கள் தஞ்சையில் பணியாற்றினேன். பின்னர் என்னை மீண்டும் திருவையாறு ஒன்றியத்துக்கு மாற்றி விட்டதாகவும் அங்கு செல்லுங்கள் என கூறினார். ஆனால் தற்போது அங்கு எனக்கு பணி தர மறுக்கிறார்கள். எனவே எனக்கு கலெக்டர் நடவடிக்கை எடுத்து பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏல தேதியை மாற்ற வேண்டும்

பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கழனிவாசல் கிராமத்தில் பாலசுப்ரமணியன் கோவிலுக்கு சொந்தமாக 15 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஏலம் விட போவதாக கடந்த 10-ந் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான ஏல நிபந்தனைகளும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏலம் சம்பந்தமாக முன்கூட்டியே எந்தவித அறிவிப்பு விளம்பரமோ செய்யாமல் ஆன்லைனில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டதால் பெரும்பாலான ஏழை, எளிய கிராம விவசாயிகளுக்கு தெரியாமல் போய்விட்டது. இந்த விவரம் தெரிந்து ஏற்கனவே இந்த நிலங்களை குத்தகைக்கு அனுபவித்து வந்த விவசாயிகள், கிராமத்தினர் தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர். இதையடுத்து ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏல தொகையை ஒரே தவணையாக விவசாயிகளால் செலுத்த முடியாது என்பதால், கலெக்டர் இதனை பரிசீலனை செய்து ஏல தேதியை மாற்றி வைத்து குறு, சிறு விவசாயிகள் பயனடையும் வகையில் 15 ஏக்கரையும் ஒரே கட்டமாக ஏலமிடப்படாமல் பிரித்து, பிரித்து ஏலமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story