மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைத்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைத்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொட்டுநீர் பாசனம்
சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் சுவைதானிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும், வழங்கப்படுகிறது. இதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு 1800 எக்டேர் பரப்பளவிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.50 ஏக்கர் வரை சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம்.
பயனடையலாம்
மேலும், சொட்டுநீர் பாசன திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ஆயிரமும், தரைநிலை நீர்தேக்க தொட்டி அமைத்திட ரூ.40 ஆயிரமும் மற்றும் குழாய்கள் அமைக்க ரூ.10 ஆயிரம் மானியமும் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது.
எனவே, நுண்ணீ்ர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணைநிலை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம்.
இணையதளம்
இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மற்றும் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு சான்றிதழ்களை சமர்ப்பித்து மானியத்துடன் கூடிய சொட்டுநீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.