திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய டிரைவர் கைது


திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய டிரைவர் கைது
x

மயிலாடுதுறையில், திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். காதலர் தினத்தில் இந்த வெறிச்செயல் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில், திருமணம் செய்ய மறுத்த காதலியை திருப்புளியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். காதலர் தினத்தில் இந்த வெறிச்செயல் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எழுவேலி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செந்தமிழன்(வயது 25). டிரைவர். இவர், மணல்மேடு பகுதியை சேர்ந்த 23 வயது நிரம்பிய பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தார்.

அந்த பெண், மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இதற்கிடையில் செந்தமிழனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததை அறிந்த அந்த பெண், செந்தமிழனிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

திருமணம் செய்ய மறுப்பு

ஆனால் செந்தமிழன் செல்போனிலும், நேரிலும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த பெண்ணிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(காதலர் தினம்) இரவு தனியார் ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வெளியே வந்த அந்த பெண்ணிடம் செந்தமிழன், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனை அந்த பெண் மறுத்துள்ளார்.

திருப்புளியால் குத்தினார்

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தமிழன், தான் மறைத்து வைத்திருந்த திருப்புளியை(ஸ்குரு டிரைவர்) எடுத்து அந்த பெண்ணின் தலை, முகம், கைகளில் சரமாரியாக குத்தினார்.

இதில் அந்த பெண்ணுக்கு தலை, முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண், மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், செந்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

காதலர் தினத்தன்று தான் காதலித்த பெண்ணை டிரைவர் ஒருவர் கொடூரமாக தாக்கி வெறிச்செயலில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story