நொளம்பூரில் டிரைவர் அடித்துக்கொலை; தந்தை-மகன் கைது
நொளம்பூரில் டிரைவர் அடித்துக்கொலை செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நொளம்பூர், அபிநயம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சீனிவாசன் மூர்த்தி (வயது 46). கார் டிரைவரான இவர், கடந்த 14-ந்தேதி முகப்பேர் மேற்கு, சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த நொளம்பூர் போலீசார், சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் 14-ந்தேதி இரவு 10 மணியளவில் சீனிவாசன் மூர்த்தி குடிபோதையில் காரை ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. அப்போது சாலையோரம் நிறுத்தி இருந்த ஒரு காரின் மீது மோதினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காரின் உரிமையாளர்களான மாறன் சுகுமாரன் (68) மற்றும் அவருடைய மகன் மாறன் (32) ஆகிய இருவரும் சேர்ந்து போதையில் இருந்த சீனிவாசன் மூர்த்தியை கைகளால் தாக்கினர். இதில் சீனிவாசன் மூர்த்தி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றினர். இது தொடர்பாக மாறன் சுகுமாரன் மற்றும் மாறன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.