டிரைவர் உடல் நசுங்கி பலி; 2 பேர் படுகாயம்


டிரைவர் உடல் நசுங்கி பலி; 2 பேர் படுகாயம்
x

கரூர் அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு லாரியின் டிரைவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

விபத்து

நாமக்கல் பகுதியில் இருந்து கரூர் வழியாக திருச்சி நோக்கி சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த 2 லாரிகளும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த மினிலாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 23) உடல் நசுங்கிய நிலையில் லாரியிேலயே சிக்கி உயிரிழந்தார்.

2 பேர் காயம்

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்கள் உதவியுடன் விபத்தில் படுகாயம் அடைந்த டிப்பர் லாரியின் உரிமையாளரான கரூர் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த தமிழழகன் (45), டிரைவரான தோகைமலை பகுதியை சேர்ந்த தங்கவேல் (35) ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற மினிலாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி விட்டதால் அதில் நசுங்கி இறந்த அரவிந்த் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மினிலாரியின் முன்பகுதி அகற்றப்பட்டது. அதன் பின்னரே அரவிந்தின் உடலை மீட்க முடிந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழழகன் மற்றும் தங்கவேல் ஆகிய 2 பேரும் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story