டிரைவரை கொன்று ஆற்றில் உடல் புதைப்பு
நீடாமங்கலம் அருகே டிரைவரை கொன்று ஆற்றில் உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே டிரைவரை கொன்று ஆற்றில் உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிரைவர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பெரம்பூர் ஊராட்சி முல்லைவாசல் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசிர்வாதம் மகன் திருமாவளவன்(வயது 21) அறுவடை எந்திர டிரைவரான இவர், வெளியூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தஞ்சையை அடுத்த திருவையாறு அருகேயுள்ள கடுவெளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்கத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்தார். பின்னர் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
போலீசில் புகார்
இதனால் கவலையடைந்த திருமாவளவன் குடும்பத்தினர் அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடு் என பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று முன்தினம் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகே மதகு கட்டையில் ரத்தக்கறையும், மாயமான திருமாவளவன் அணிந்து இருந்த செருப்பும் இருந்ததை நேற்று உறவினர்கள் பார்த்தனர்.
கொலை செய்து ஆற்றில் உடல் புதைப்பு
இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கோரையாற்று பகுதியில் தேடிப்பார்த்தனர். அப்போது ஆற்றின் நடுவில் நாணல் செடி புதர் மண்டியுள்ள இடத்தில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் நாய்கள் தோண்டிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் தோண்டி பார்த்தபோது ஆற்றில் 6 அடி ஆழத்தில் திருமாவளவன் உடல் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவரை யாரோ கொன்று அவரது உடலை புதைத்து வைத்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து திருமாவளவனின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
திருவாரூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பின்னர் கொலை செய்யப்பட்ட திருமாவளவன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நீடாமங்கலம் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.