இரும்பு கம்பியால் தாக்கி டிரைவர் கொலை
வாய்மேட்டில் இரும்பு கம்பியால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாய்மேடு:
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுமனை புகுவிழா
நாகை மாவட்டம், வாய்மேடு மேற்கு சாயக்காரன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 46). தண்ணீர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மன்னாடிகாடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்கள் ராமமூர்த்தி(32), மணிவண்ணன்(28) ஆகியோருக்கும், செல்வகுமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இரும்பு கம்பியால் தாக்கினர்
பின்னர், செல்வகுமார் தனியாக வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணன் மற்றும் அவரது சகோதரர் ராமமூர்த்தி இருவரும் செல்வகுமாரை வழிமறித்து இரும்பு கம்பியால் நெற்றியில் தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒருவர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராமமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த செல்வகுமாருக்கு துர்காதேவி என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.