கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து டிரைவர் பலி


புதுக்கோட்டை அருகே பொக்லைன் எந்திரத்திற்கு டீசல் நிரப்ப சென்ற போது கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து டிரைவர் பலியானார்.

புதுக்கோட்டை

மண் சரிந்து விழுந்தது

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே கிள்ளுக்குளவாய்பட்டியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் குடுமியான்மலையை சேர்ந்த கருப்பையா மகன் லெட்சுமணன் (வயது 19) என்பவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை குவாரி பள்ளத்தில் இருந்து ெலட்சுமணன் பொக்லைன் எந்திரத்திற்கு டீசல் நிரப்புவதற்காக மேலே ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குவாரியில் மண் சரிந்து விழுந்ததால் பொக்லைன் எந்திரத்துடன் லெட்சுமணன் கீழே விழுந்தார். இதில் அவர் பொக்லைன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது மண் சரிந்து பொக்லைன் எந்திரத்தின் மீது விழுந்து மூடியது.

வாலிபர் உடல் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பானுப்பிரியா தலைமையில், கீரனூர் நிலைய அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சிப்காட், கந்தர்வகோட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கல்குவாரி பள்ளத்துக்குள் இறங்கினர். 7 மணி நேர போராட்டத்திற்கு பின் மண் முழுவதையும் அகற்றி பொக்லைன் எந்திரத்தில் இருந்து இறந்த நிலையில், லெட்சுமணன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதற்கிடையே அங்கு வந்த லெட்சுமணன் உறவினர்கள், கல்குவாரி ஊழியர்கள் ெலட்சுமணன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து போலீசார் லெட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்குவாரியில் மண் சரிந்து விழுந்து டிரைவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

1 More update

Next Story