டிராக்டர் மோதி டிரைவர் பலி; மனைவி படுகாயம்
லால்குடி அருகே டிராக்டர் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். மனைவி படுகாய மடைந்தார்.மற்றொரு சம்பவத்தில் திருச்சியில் டயர் வெடித்ததால் ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி இறந்தார்.
லால்குடி அருகே டிராக்டர் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். மனைவி படுகாய மடைந்தார்.மற்றொரு சம்பவத்தில் திருச்சியில் டயர் வெடித்ததால் ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி இறந்தார்.
டிராக்டர் மோதியது
திருச்சி சிந்தாமணி வெனிஸ் நகரை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மகன் தண்டாயுதபாணி (வயது 35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சக்தி பிரியதர்ஷினி. நேற்று மதியம் கணவன்-மனைவி இருவரும் திருச்சியில் இருந்து ஆட்டோவில் லால்குடி வழியாக அரியலூருக்கு சென்றனர். திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் லால்குடியை அடுத்த மாந்துறை தனியார் கல்லூரி அருகே வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் ஆட்டோ மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த தண்டாயுதபாணி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சக்தி பிரியதர்ஷினியை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டயர் வெடித்தது
திருச்சி-திண்டுக்கல் ரோடு கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர். இவரது மனைவி அவ்வாபீ (73). இவரும், இவரது சகோதரியின் மகள் பரீதாவும் (43), அவ்வாபீயின் பேரன் இலியாஸ் அகமதுவின் ஆட்டோவில் தனது பேத்தியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். வளைகாப்பு முடிந்து திரும்பி ஆட்டோவில் வந்த போது, திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் பகுதியில் ஆட்டோவின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாவு
இதில் அவ்வாபீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பரீதாவும், இலியாஸ்அகமதுவும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவ்வாபீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.