கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை
கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்:
டிரைவர்கள்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் என்ற சக்திகுமார் (வயது 34). வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். சக்திகுமாரின் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். இதையடுத்து சக்திகுமாரின் பெற்றோருடன் அவரது மகன் வசித்து வருகிறான். சக்திகுமார் அதே பகுதியில் மற்ெறாரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் திருவெறும்பூர் காந்திநகர், சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவர் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் டாக்டர்களுக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கள்ளத்தொடர்பு
இந்த நிலையில் சக்திகுமார் மற்றும் முத்துப்பாண்டிக்கு பெண் சகவாசம் இருந்துள்ளது. மேலும் சக்திகுமார் வீட்டின் அருகே இருந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன், முத்துப்பாண்டிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணுக்கும், சக்திகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுடன் பழகுவது தொடர்பாக முத்துப்பாண்டியை சக்திகுமார் கண்டித்துள்ளார்.
ஆனால் அதை கேட்காமல் முத்துப்பாண்டி தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் இது பற்றி அந்த பெண்ணின் அண்ணனிடம் கூறிவிடுவதாக முத்துப்பாண்டியை சக்திகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இதையடுத்து முத்துப்பாண்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்திகுமாரின் வீட்டிற்கு சென்று அவரிடம் இனி அந்த பெண்ணுடன் பழகமாட்டேன் என்றும், அதனால் இப்பிரச்சினை குறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அப்போது முத்துப்பாண்டிக்கும், சக்திகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசில் சரண்
இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார், சக்திகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.