பவானி ஆற்றில் டிரைவர் பிணம்

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் டிரைவர் பிணமாக கிடந்தார்.
மேட்டுப்பாளையம்
கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 44). டிரைவர். இவருடைய மனைவி சித்ராதேவி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜ்குமார், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசிலும் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் சுக்கு காபி கடை அருகே பவானி ஆற்றில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தது ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






