போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 193 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 193 பேரை போலீசார் கைது செய்தனர்.
டிரைவருக்கு அபராதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ். லோடுவேன் டிரைவர். இவர் வேனில் விறகு ஏற்றிக்கொண்டு வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு அவரது வண்டியை போலீசார் நிறுத்தி அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் வேனை சாலையில் நிறுத்தி வேனுக்கு அடியில் படுத்துக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்ததாக நகர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் மதன்ராஜ் மீது நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போராட்டம்
இதனை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சரக்கு வாகனங்களுடன் கூடிய லோடு வேன் டிரைவா்கள் 193 பேர் திரண்டனர். பிறகு அவர்கள் சரக்கு வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் நகர் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து துணை சூப்பிரண்டு சபரிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் அனுமதியின்றி சரக்கு வாகனங்களுடன் திரண்டு சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த 193 லோடு வேன் டிரைவர்களை கைது செய்தனர்.