ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து


ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
x

நெல்லை மாநகர பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 18 மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா மற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நில அபகரிப்பு சம்பந்தமான புகார்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உரிமம் ரத்து

கடந்த ஆண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், அதிக அளவில் சரக்குகள் ஏற்றிச்செல்லுதல் ஆகிய குற்றங்களின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் 4 ஆயிரத்து 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தேன். அதன்பேரில் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1,665 பேர்

இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி வரை விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,665 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட் இல்லாமல்...

நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டியதாக 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 15 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story