வேளாண்மை துறையினர் கொண்டு வந்த ட்ரோன் பழுது
வேளாண்மை துறையினர் கொண்டு வந்த ட்ரோன் பழுதானது
அடுக்கம்பாறை
ஊசூர் அருகே பூச்சி மருந்து தௌிக்க வேளாண்மை துறையினர் கொண்டு ட்ரோன் பழுதடைந்தது.
நவீன தொழில்நுட்ப எந்திரங்கள்
வேளாண்மை துறை சார்பில் நடவு மற்றும் அறுவடை பணிகளுக்கு, நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிதாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பத்துடன் கூடிய 'ட்ரோன்' என்ற பறக்கும் விமான கருவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கருவி கொண்டு நெல் வயல் மற்றும் கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது.
ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் ரெட்டியார் என்பவரின் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நெற்பயிருக்கு மருந்து தெளிக்க வேளாண் துறை அதிகாரிகளை அவர் நாடினார்.
ட்ரோன் பழுது
இதனையடுத்து வேளாண் துறை அதிகாரிகள் ட்ரோன் கருவியை கொண்டு வந்து மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மருந்து தெளித்துக் கொண்டு ஒரு சுற்று வந்ததும் திடீரென ட்ரோன் பழுதடைந்து கீழே விழுந்தது. அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் ஆகியும் கருவி சரியாகவில்லை. இதனையடுத்து மருந்து தெளிக்கும் பணி முழுமை பெறாமல் ட்ரோன் கருவியை அதிகாரிகள் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
ஏற்கனவே 2 முறை மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்ட போது கருவி பழுதானது என்பது குறிப்பிடத்தக்கது.