இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்
அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
இடைநின்ற குழந்தைகள்
பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரையில் பள்ளி செல்லா குழந்தைகள் 2,934 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 749 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2,185 குழந்தைகள் இன்னும் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை. 6 முதல் 17 வயதுடைய இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க பிற துறைகள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம்.
இதனை அவ்வப்போது கண்காணித்து பள்ளியில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் மூன்றடுக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுசெய்ய வேண்டும்
மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைபாதையில் வசிப்பவர்கள், மேம்பாலங்களின் கீழ் வசிக்கும் வீடற்றவர்கள், போக்குவரத்து சிக்னல் இடையே காணப்படும் விற்பனையாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் குடும்பங்களிலும் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா? என்பதை கண்டறிய வேண்டும்.
மேலும் சந்தைகள், ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகள், பஸ் நிலையங்கள், சுற்றுலா தளங்கள், செங்கல் சூளைகள் போன்ற பகுதிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள்
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் இந்த நடவடிக்கைகளில் இப்பகுதிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு செய்து பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய வேண்டும். மேலும் ஊராட்சி அளவில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், மகளிர் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரும் இப்பணிகளில் இணைந்து பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.