'வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும்' -விவசாயிகள் சங்க பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்
வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாடானை,
வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொதுக்கூட்டம்
திருவாடானை தாலுகா, சி.கே.மங்கலம், கைகாட்டியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் வட்டார விவசாயிகள் சார்பில் விவசாயிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி மத்திய, மாநில அரசை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் யூனியன் தலைவர் அரசூர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அரசு வக்கீல் காசிநாதன், தி.மு.க. மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் நல்ல சேதுபதி, சி.கே. மங்கலம் சுப்பிரமணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதிவாணன், சோழந்தூர் பாலகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஒரிக்கோட்டை விவேகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கை ராஜன் வரவேற்றார்.
வறட்சி நிவாரணம்
இந்த கூட்டத்தில் தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அம்பலம், அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கே.சி. ஆனிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.எனவே நிவாரணத் தொகையை உடனடியாக அரசு அறிவித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராஜபாண்டி, மாநில செயலாளர் சூசை மாணிக்கம், ஓ.பன்னீர்செல்வம் அணியின் மேற்கு ஒன்றிய செயலாளர் கந்தவேலன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பெரிய கீரமங்கலம் ராமநாதன் நன்றி கூறினார்.