500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x

தொடர் மழையால் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

ஏரிகள் நிரம்பின

கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் ராசிபுரம் பகுதியில் உள்ள அணைப்பாளையம் ஏரி, குருக்கபுரம் ஏரி, பட்டணம் ஆலந்தூர் ஏரி போன்ற ஏரிகள் நிரம்பி வழிந்தன. அங்காங்கே உள்ள குளங்கள், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் ராசிபுரத்தில் உள்ள ஏரிகள் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. நல்ல மழை பெய்ததன் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

அணைப்பாளையம் ஏரி நிரம்பியதன் காரணமாக அந்த ஏரி தண்ணீர் சந்திரசேகரபுரம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சுமார் 500 ஏக்கர் விவசாய நிலத்தில் புகுந்தது. இதனால் பயிரிடப்பட்ட வெங்காயம், சோளம், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, நெல் உள்பட பல்வேறு விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வயல்களில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மதகை திறக்க வேண்டும்

தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்ததாகவும், இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், இதற்கு காரணமான அணைப்பாளையம் ஏரி தண்ணீர் வெளியேற மதகை திறந்து விட வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறினர்.

கடந்த ஒரு மாதமாக இருந்து வரும் இந்த நிலைமையை வருவாய் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் எவரும் வந்து பார்க்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.

அணைப்பாளையம் ஏரி தண்ணீர் வயல்களுக்குள் புகுந்த நிலையில் நூற்றுக்கணக்கான வீடுகளிலும் புகுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறினர். அணைப்பாளையம் ஏரி நிரம்பியதன் காரணமாக கவுண்டம்பாளையம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அணைப்பாளையம் கிராமத்திற்கு பொதுமக்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரெயில் பாதையில் தண்ணீர்

சந்திரசேகரபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே பாதையில் தண்ணீர் புகுந்தது. நாமக்கல்லில் இருந்து ரெயில்வே பணியாளர்கள் விரைந்து வந்து ரெயில் பாதையில் உள்ள தண்ணீரை வெளியேறச் செய்தனர். மேலும் அங்குள்ள ரெயில்வே பாலத்தை தொட்டவாறு தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே ரெயில்வே துறை ஊழியர்கள் ரெயில் பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் ரெயில்கள் வேகத்தை குறைத்து மெதுவாக சென்று வருவதாக கூறப்படுகிறது.

வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை ெபாதுமக்கள், வாகன ஓட்டிகள் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் மீது நின்றும், ரெயில்வே பாதையில் கூட்டம் கூட்டமாக பார்த்து நின்று சென்றனர்.


Next Story