மருதூர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
நெல்லை அருகே மருதூர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை அருகே மருதூர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
கல்லூரி மாணவர்
நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட் முனையாடு ஆழ்வார் நாயனார் தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகன் பாலமுருகன் (வயது 19). இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது விடுமுறையில் பாலமுருகன் தனது நண்பர்கள் சிலருடன் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று பாலமுருகன் நண்பர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள மருதூர் அணையில் குளிக்க சென்றார்.
தண்ணீரில் மூழ்கி பலி
அப்போது அணையில் குளித்துக் கொண்டு இருந்தபோது, பாலமுருகன் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
இதுகுறித்து உடனடியாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியினர் உதவியுடன் இறந்த பாலமுருகனின் உடலை தண்ணீரில் இருந்து மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
நெல்லை அருகே மருதூர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.