தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பலி

முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேரன்மாதேவி:
முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆற்றில் குளித்தனர்
தென்காசி மாவட்டம் ஊத்துமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ராகுல் (வயது 25). பட்டப்படிப்பு படித்துள்ள இவர் நேற்று மாலையில் தன்னுடைய உறவினர்கள் 7 பேருடன் காரில் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திருப்புடைமருதூருக்கு சென்றார்.
அங்குள்ள கோவிலுக்கு வடபுறம் உள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்தனர்.
தேடும் பணி
அப்போது ஆற்றின் ஆழமான பகுதியில் ராகுல், அவருடைய அக்காள் புளியங்குடியைச் சேர்ந்த பரமசிவன் மனைவி திவ்யா (32), உறவினரான சங்கரன்கோவில் சங்குபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் ஸ்ரீகணேஷ் ஆகிய 3 பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு தத்தளித்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீகணேசை பத்திரமாக மீட்டனர். ஆனால் ராகுல், திவ்யா ஆகியோரை மீட்க முடியவில்லை. அவர்கள் ஆற்றில் மூழ்கினார்கள்.
அக்காள்-தம்பி பலி
இதுகுறித்து சேரன்மாதேவி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பலவேசம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் மூழ்கிய ராகுல், திவ்யா ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஆற்றில் சற்று தொலைவில் பிணமாக மிதந்த ராகுல், திவ்யா ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
போலீஸ்காரரின் மனைவி
பின்னர் 2 பேரின் உடல்களையும் வீரவநல்லூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகணேஷ், சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த திவ்யாவின் கணவர் பரமசிவன், கரிவலம்வந்தநல்லூரில் போலீஸ்காராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






