போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
முத்துப்பேட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
முத்துப்பேட்டை:
போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி முத்துப்பேட்டையில் போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கோவிலூர் பைப்பாஸ் சாலையில் வனத்துறை அலுவலகம் வாசலில் இருந்து மாரத்தான் போட்டியை முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டம் மன்னார்குடி சாலை, சித்தேரிகுளம், பெண்கள் பள்ளி, ஆண்கள் பள்ளி, ெரயில்வே கேட், குமரன் பஜார், பழைய பஸ் நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர் வழியாக புதிய பஸ் நிலையத்தை சென்று அடைந்தது. மாரத்தான் போட்டியில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பாதைகளை கைகளில் ஏந்தி சென்றனர். போட்டியில் முதல், மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் போலீ சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.