போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமில் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே போதை பழக்கத்தில் இருந்து மீள வேண்டும். போதைப் பொருட்களை உபயோகிப்பதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. குடும்ப பொருளாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. குடும்பத்தில் அமைதி சீர்குலைகிறது. போதைப்பழக்கம் உள்ளவர்கள் தன்னையறியாமல் கொடும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். சமுதாயத்தில் அவமானப்பட நேரிடுகிறது. புகை பழக்கத்தால், சுற்றி உள்ளவர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே முற்றிலும் அந்த பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இந்த பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகராட்சி ஆணையர் தமயந்தி, துப்புரவு ஆய்வாளர் தர்மராஜா, தாசில்தார் (கலால்) முத்துகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சிஜின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.