சேலம் மாநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பேச்சு
சேலம் மாநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா கூறினார்.
அன்னதானப்பட்டி,
கருத்தரங்கு
சேலம் அன்னதானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
சேலம் மாநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு காவலர் என்ற வீதம் நியமிக்கப்பட்டு, பள்ளிகளில் போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒழிக்க வேண்டும்
மேலும் சேலம் மாநகரத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்கு அனைத்து போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் துணை கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், லாவண்யா, மாடசாமி, மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பள்ளப்பட்டி
இதேபோல பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு போதைப்பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் பள்ளப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் துணை கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், லாவண்யா, மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் போதை பொருட்களை தவிர்ப்பது குறித்து பேசினார். மேலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.