விலை வீழ்ச்சியால் பறிக்காமல் விடப்பட்ட முருங்கைக்காய்கள்


விலை வீழ்ச்சியால் பறிக்காமல் விடப்பட்ட முருங்கைக்காய்கள்
x
தினத்தந்தி 7 Sep 2023 1:00 AM GMT (Updated: 7 Sep 2023 1:00 AM GMT)

ஆண்டிப்பட்டி தாலுகாவில் முருங்கைக்காய்கள் விலை வீழ்ச்சியால் மரத்திலேயே பறிக்காமல் விட்டுள்ளனர்.

தேனி

முருங்கை சாகுபடி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், சிலுக்குவார்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.

இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தரத்திலும், ருசியிலும் மேம்பட்டு இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து விவசாயிகள் ஆண்டிப்பட்டி பகுதியில் வந்து முகாமிட்டு வாங்கி செல்கின்றனர். ஆண்டிப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, கொம்புக்காரன்புலியூர் பகுதிகளில் விளையும் முருங்கைக்காய்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

விலை கடும் வீழ்ச்சி

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய்கள் ரூ.80 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு முருங்கைக்காய்கள் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ முருங்கைக்காய்கள் ரூ.5 -க்கு கூட வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இந்த விலை பறிக்கும் கூலிக்கு கூட போதுமானதாக இல்லாத காரணத்தால், முருங்கைக்காய்களை பறிக்காமல் மரத்தில் அப்படியே விட்டுள்ளனர்.

இந்த விலை வீழ்ச்சியால் முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே முருங்கைக்காய்களை நிலையான விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story