குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலூர் பஸ் நிலையத்தில் குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. சமீபத்தில் நெல்லிக்குப்பம் அருகே 2 தனியார் பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்களை மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அழைத்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினர். இருப்பினும் சிலர் குடிபோதையில் தனியார் பஸ்களை இயக்கி வருவதாகவும், அதிவேகமாக செல்வதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார்.
போலீசார் சோதனை
அதன்பேரில் கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் கடலூர் பஸ் நிலையத்தில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது பஸ் நிலையத்திலும், பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே வரும் போதும் தனியார் பஸ்களை வழிமறித்து, அதை ஓட்டி வந்த டிரைவர்களிடம் மதுசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
அப்போது கடலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு தனியார் பஸ்சை ஓட்டி சென்ற டிரைவரை வழிமறித்து அந்த கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் இருந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் பஸ்சுக்கான ஆர்.சி. புக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் 50-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.