குடிபோதையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
குடிபோதையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசன் மகன் சரவணன்(வயது 32). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 27-ந் தேதி தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற அவர்களது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சரவணன் மற்றும் அவரது தாயார் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கிருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு சரவணனின் தாயார் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். சரவணன் குடிபோதையில் நிகழ்ச்சி நடந்த வீட்டிற்கு அருகிலேயே கிடந்துள்ளார். தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்த நிலையில் இதுகுறித்து சரவணனின் தந்தை சந்திரகாசனுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சந்திரகாசன் தாதம்பேட்டை வந்து சரவணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சரவணனின் தந்தை சந்திரகாசன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.